நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
தமிழ்சினிமாவில் டிஎம்எஸ் வாய்ஸ் கம்பீரமானது. அந்த குரலே சர்ந்து பாடும்போது லைட்டா ஜகா வாங்கும்னா அந்த ஒரே குரல், சீர்காழி கோவிந்த ராஜனுடைய வெண்கலக்குரல்கிட்டதான்..
தெய்வம் படத்தில் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.. பாடலாகட்டும்,, சந்திரோதயம் படத்தில் காசிககு போகும் சன்யாசி, பாடலாகட்டும்.. இரட்டை குரலில் சீர்காழியின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கும்.
அப்படிப்பட்டவர் தனித்துபாடும் போது என்றால் கேட்கவா வேண்டும்.
விநாயகனே வினை தீர்ப்பவனே..என்று சீர்காழியை கேட்க ஆரம்பித்தால், அந்த விடியற்காலைப்பொழுது அவ்வளவு பக்திமயமாகிவிடும்..
பக்தியில் திளைத்து, திரையில் குழைத்து, கடைசியில் அரசியல் மேடைகளிலெல்லாம் தவறாமல் ஒலிக்கும் சரித்திர குரலாகிவிட்டது சீர்காழியின் குரல்.,
அதிமுக மேடையா? நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என உலகம் சுற்றும் வாலிபன படப்பாடல் பட்டையைகிளப்பும்.
ஜெயலலிதா அவர்களுக்கு வரவேற்பா, வெற்றிக் களிப்பா, முத்துசிப்பி படத்தில்….தொட்ட இடம் துலங்க வரும் தாயக்குலமே வருக..கணீர் கணீர் என சீர்காழி குரல் எகிறும்…இரண்டு பாடல்களிலும் என்ன கம்பீரமான குரல்..
திரை, மேடை என இரண்டிலும் குரல் வளத்தால் ஒரே நேரத்தில் கலக்கும் இசை மேதைகள் மிகவும் குறைவு..
கர்நாடக இசைமேதைகள், பக்திப்பாடல்கள் என ஒரு பக்கத்திற்கு ஈடுகொடுத்து சாகசம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் திரைப் பாடல்கள் மூலமும் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் நடிப்பு அவதாரத்தையும் விடவில்லை. ஏராளமான படங்களில் நடித்தார். அகத்தியன் படத்தில் கதாநாயகனாகவே அசத்தியவர்.
எம்.கே.டி, பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் போன்றோர் குரல் வளத்தால் கொடி கட்டிபறந்தவர்கள். என்றாலும் அட்சர சுத்தம் விஷயத்தில் பிசிறுகள் இருக்கவே செய்யும்..
ஆனால் பிசிறே இல்லாமல் தமிழை அப்படியொரு சுத்தமாக கணீர் குரலில் முதன் முதலாக கொடுத்தவர்.. ஆனானப்பட்ட ஜாம்பவான் டிஎம்எஸ்கூட துல்லி யமான உச்சரிப்பில் இவருக்கு பின்னால்தான்
ஒரு புறம் பக்திப்பாடல் இவரின் குரலால் உருப்பெற்று சாகாவரத்துடன் இன்றளவும் ஒலிக்கின்றன. இன்னொரு புறம் திரைப்பாடல்கள்..
உழைப்பதில்லா உழைப்பை .. என நாடோடி மன்னனில் மக்கள் திலகத்திற்காக உச்சத்தில் போன குரல், நாகேஷுக்காக நீர் குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கை யடா.. என நேர்மாறான அடக்கத்தின் வடிவமாகிவிட்டது..
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே…
பட்டணந்தான் போகலாமடி,,,
அறுபடை வீடு கொண்டதிருமுருகா..
தேவன் கோவில் மணியோசை.
பணம் பந்தியிலே..குணம் குப்பையிலே
எங்கிருந்தோ வந்தான் இடைஞ்சாதி நான் என்றான்.
அமுதும் தேனும் எதற்கு…
வெற்றிவேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்
இப்படி போய்க்கொண்டே இருக்கும் அவரின் சாகாவரம் பெற்ற கானங்களின் பட்டியல்..
கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும்.கர்ணன் படத் தின் ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது….” பாடலின் கம்பீரக்குரல். புதிதாக கேட்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் வியப்பின் குறீயிடாகவே இருக்கும்.
இசைக்காக எண்ணற்ற பட்டங்களை வென்று தமிழினத்தின் நிகரற்ற அடையாளமாகத் திகழும் அமரர் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராசனின் 87 வது பிறந்த நாள் இன்று….