புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சசிதரூர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், மொத்தம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டது. விவசாயி ஒருவர் பலியானார். அந்த நிகழ்வு குறித்து தவறான கருத்து தெரிவித்தார்கள் என்று கூறி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிரினால் பாண்டே, சாபர் அகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் மற்றும் வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது.
தேசத்துரோகம், குற்றவியல் மிரட்டல், பகைமையை ஊக்குவித்தல், பொது அமைதியை குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டல், குற்றவியல் சதி, மத உணர்வுகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட நபர்கள் மீது, டெல்லி, ஹரியானா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.