முசாபபூர்: கும்பல் வன்முறையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமர் மோடிக்கு வெளிப்படையான கடிதம் எழுதிய 49 பிரபலங்களின் மீதான தேசத்துரோக வழக்கை ரத்துசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அடங்கிய 49 பேர், பிரதமருக்கு கடிதம் எழுதியதை அடுத்து, அவர்கள் அனைவரின் மீதும் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டன மற்றும் கடும் கண்டனங்களும் எழுந்தன. சர்வாதிகார அரசு என்று பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட, பல்வேறு பிரபலங்களும் தங்களின் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தனர்.
ஆனால், தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்தவர் அதற்கான உரிய ஆதாரங்களை வழங்காத காரணத்தால் வழக்கை ரத்துசெய்வது என பீகார் மாநில போலீசார் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். மேலும், பொய்ப்புகார் அளித்த காரணத்திற்காக சம்பந்தப்பட்டவர் மீது, சட்டப்பிரிவு 182ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.