சம்பல்: இன்று வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ரம்ஜான்  பண்டிகையையொட்டி,  அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் உள்ள சம்பல் பகுதியில் உள்ள பல கோவில் இஸ்லாமியர்களிடம் இருந்து உ.பி. அரசால் மீட்கப்பட்டுள்ளது. சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா், கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் புகார் எழுந்தது.   இதனால், அந்த பகுதியில்  தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.  இந்த நிலையில்,  ரம்ஜான் பண்டிகையையொட்டி, இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் யோகி அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதனால் சம்பல் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையொட்டி சம்பல் மசூதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,  மீரட்டின் பதற்றமான பகுதிகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

முக்கிய பகுதிகளில்,  சிசிடிவி, ட்ரோன்கள் மற்றும் உள்ளூர் உளவு துறை மூலம் தொழுகை நடத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மீரட் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

உ.பி.யில் கடந்த ஆண்டு ரம்ஜான் தொழுகைகளின் போது போலீஸாரின் உத்தரவுகளை மீறியதற்காக 200 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.