ஸ்ரீநகர்:

காஷ்மீர் புல்வாமா பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை  சுற்றி வளைத்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில்  4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 14ந்தேதி  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி அடில் அகமது நடத்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் உடல்சிதறி பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில்  மீண்டும் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த  55 ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத வித மாக அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மேஜர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.

பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் சரமாரி யாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே  கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.