சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடந்த அறவழி போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

இறுதி நாளன்று இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. தீ வைப்பு, தடியடி, கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்தது. இதில் போலீஸ்காரர்களும், போராட்டக்காரர்களும் பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் சமூக விரோதிகள், தேச விரோதிகள், பிரிவினைவாதிகள் ஊடுறுவியதாக காவல்துறை குற்றம்சாட்டியது.

இதைத்தொடர்ந்து மெரினாவிற்கு செல்லும் சாலைகளை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு போராட்டம் நடப்பதை தடுக்கும் வகையில் மெரினாவில் 144 தடை உத்தரவை பிறப்பித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 29ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை வாபஸ் பெற்று கமிஷனர் ஜார்ஜ் இன்று திடீரென உத்தரவிட்டுள்ளார்.