பெங்களூரு
பிரதமர் மோடியும் பாஜக கர்நாடக முதல்வர் வேட்பாளரும் ஒரே ஒரு பேரணியில் மட்டும் சேர்ந்து கலந்துக் கொள்வது பத்திரிகையாளர்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
வரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரசும் பாஜகவும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளன. பாஜக சார்பில் எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் எங்கும் பிரசாரம் செய்ய உள்ளார். அதே நேரத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஓரம் கட்டப்படுவதாக நாளேடுகளில் செய்திகள் வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாஜக வின் தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவை பெங்களூருவில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடியூரப்பாவை பிரதமர் மோடியுடனோ அல்லது மற்ற தலைவர்களுடனோ கூட்டத்தில் கலந்துக் கொள வேண்டாம் என அமித்ஷா கூறியதாக செய்தி வந்துள்ளது. மேலும் எடியூரப்பாவின் பிரசாரத் திட்டத்தையும் அவரே ஏற்பாடு செய்துக் கொள்ளும்படி கூறியதாகவும் செய்திகள் வந்துள்ளன.
வடக்கு கர்நாடகத்தில் லிங்காயத்துகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிந்ததும் எடியூரப்பாவை பாஜக கழட்டி விடலாம் எனவும் யூகங்கள் உள்ளன.
ஒரு மூத்த பாஜக தலைவர், ”யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சட்டசபை உருவானால் பாஜகவும் மதச் சார்பற்ற ஜனதா தளமும் சேர்ந்து ஆட்சியமைக்க முயலும். அப்போது எடியூரப்பாவை முதல்வராக்க இரு கட்சிகளுமே மறுத்து விடும்” என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் எடியூரப்பாவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை இழக்கவும் பாஜக தலைமை விரும்பவில்லை என்பதால் தற்போதைக்கு அவரை முதல்வர் வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளதாக கூறாப்படுகிறது.
மற்றொரு பாஜக தலைவர் இதை மறுத்துள்ளார். அவர், “கடந்த 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மாநில பாஜக தலைவராக எடியூரப்பா அறிவிக்கப்பட்ட போதே அவர்தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்பது தீர்மானம் ஆகி விட்டது. பிரதமர் மோடி இதுவரை நடந்த அனைத்து பேரனிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எடியூரப்பா தான் பிரதமர் என கூறி வருகின்றார்.
அத்துடன் இந்த தேர்தலில் மோடி, அமித்ஷா மற்றும் எடியூரப்பா ஆகிய மூவரும் நட்சத்திர பிரசாரகர்கள் ஆவார்கள். அதனால் மூவரும் ஒரே இடத்தில் சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. அதிக இடங்களில் பிரச்சாரம் போய்ச் சேரவே மூவரும் தனித்தனியே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.