சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு, 9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களிலும், 28 மாவட்டங்களி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கானபதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்.9-ல் இடைத்தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முதல்கட்ட வாக்குப்பதிவு 6ந்தேதி நடைபெற்று முடிந்தது.  அதில் சராசரியாக 77.43 சதவீத வாக்குகள் பதிவாயின. முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள், அந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து,  இன்று 9 மாவட்டங்களில் மீதமுள்ள 35 ஒன்றியங்களுக்கு இன்று 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி,  62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும்,  இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்றைய தேர்தலில்,  34 லட்சத்து 66 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் 13 வகையானகரோனா தடுப்பு பணிகளுக்கானபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேற்றே அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குதொடங்கி, மாலை 6 மணி வரைநடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி சீட்டு  இல்லாத வாக்காளர்கள்,  வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர்உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கரநாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம்தேதி எண்ணப்படுகின்றன. மொத்தம் 74 மையங்களில் 12-ம் தேதிகாலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.