ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோகித், ராகுல் மற்றும் குல்தீப் ஆகியோர் தனிப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
இப்போதெல்லாம் ஒரு போட்டி நிறைவடைந்தவுடன், ஏதேனும் ஒரு வீரருக்கோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களுக்கோ தனிப்பட்ட சாதனைகள் பதிவாகிவிடுகின்றன.
அந்தவகையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மொத்தம் 3 வீரர்கள் புதிய ரெக்கார்டுகளைப் படைத்துள்ளனர்.
ரோகித்
ஒருநாள் போட்டிகளில், வேகமாக 7000 ரன்களைக் கடந்த உலகின் முதல் துவக்க வீரர் என்ற சாதனை ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. நேற்றையப் போட்டியில் 13 ரன்கள் எடுத்தபோது இது நிகழ்ந்தது.
மொத்தம் 137 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர், 26 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் இந்த இலக்கை எட்டியுள்ளார். இவருக்கு அடுத்து ஆம்லா, சச்சின் மற்றும் தில்ஷன் போன்ற வீரர்கள் உள்ளனர்.
குல்தீப்
குல்தீப் யாதவுக்கு ஒருநாள் அரங்கில் 100 விக்கெட் கிடைத்தப் போட்டியாக நேற்றையப் போட்டி அமைந்தது. மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய பவுலர்களில் மூன்றாவது இடம்பெற்றார். மேலும், மொத்தம் 100 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்டிய 22வது இந்திய பவுலர் என்ற பெயரும் கிடைத்தது.
ராகுல்
லோகேஷ் ராகுலைப் பொறுத்தவரை, ஒருநாள் அரங்கில் நேற்றையப் போட்டியின்மூலம் 1000 ரன்களை எட்டினார். அவர் ஆடியுள்ளது மொத்தம் 27 இன்னிங்ஸ்கள். குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டிய நான்காவது இந்திய வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்திய அணி
மேலும், இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணிக்கும் ஒரு புதிய சாதனை பட்டம் கிடைத்தது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி, நேற்றையப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 113 முறை, 300 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா(107 முறை) உள்ளது.