சென்னை:

மிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், அனுமதியின்றி செயல்பட்ட  குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் அரசை நாடி உரிமம் பெற்று ஆலையை நடத்தலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக  ஏராளமான குடிநீர் ஆலைகள் இயங்கி வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த வாரம், அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்து குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தது. நேற்றைய விசாரணையின்போது, சட்டவிரோதமாக இயங்கி வந்த 682 குடிநீர் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில், வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் குடிநீர் ஆலைகள் விண்ணப்பித்தால் உரிமம் தருவது பற்றி 15 நாளில் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என  உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு மார்ச் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..