சென்னை
வடசென்னை கடற்கரைப் பகுதிகளில் சுமார் 14 கிமீ தூரத்துக்கு கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளில் கடல்நீர் நிலத்துக்குள் ஊடுருவுவது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதே ஆகும். பல இடங்களில் ஆற்று நீரில் தடுப்பணைகள் இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் உயர வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நில தமிழகத்தில் குறிப்பாக வட சென்னையில் அதிகரித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் இளங்கோ மற்றும் மணிவண்ணன் தலைமையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், “சென்னையின் வடக்குப் பகுதிகளில் சுமார் 14 கிமீ தூரத்துக்குக் கடல் நீர் ஊடுருவியதால் நிலத்தடி நீர் கெட்டுள்ளது. இது குறிப்பாக எண்ணூரில் இருந்து பொன்னேரி வரை அதிக அளவில் உள்ளது. மொத்தத்தில் கடற்கரை ஓரமாக நடக்கும் இந்த பாதிப்பு சுமார் 300 கிமீ அளவுக்கு உள்ளது.
தமிழகத்தில் கடலூர், சென்னை, கன்னியாகுமரி, காவேரி டெல்டா பகுதிகள், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கடல்நீர் ஊடுருவல் அதிகம் உள்ளது. இந்த பாதிப்பு புதுச்சேரியிலும் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் கடினமானது என்பதால் கடற்கரை பகுதிகளில் ஓரளவுக்கு ஊடுருவ வாய்ப்புள்ளது. ஆனால் இந்த அளவுக்கு நிலத்தடி நீர் பாதிப்பு குறிப்பாக வட சென்னையில் ஏற்பட்டுள்ளது அபாயகரமானது.
இந்த கடல்நீர் ஊடுருவல் தென் சென்னையில் திருவான்மியூர் முதல் ஈஞ்சம்பாக்கம் வரையில் உள்ள 2 கிமீ தூரத்திலும் அதிக அளவிலுள்ளன. இதைத் தடுக்க மீஞ்சுர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் எடுப்பதைக் குறைக்க வேண்டும். அத்துடன் ஆரணி ஆறு மற்றும் குசஸ்தலை ஆறு ஆகியவற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தற்போது தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதால் இந்த நிலை மாறா வாய்ப்புண்டு.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.