சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்தும், சென்னையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக எண்ணூர் கடற்கரை விரைவு சாலையில் பஸ் உள்பட 4 சக்கர வாகன போக்கு வரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்ட புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் சூறாவளியுடன் மழை கொட்டியது. புயல் காரணமாக வங்கக்கடலில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. 10மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததால், பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கும்படி மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை எண்ணூர், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம், மஸ்தான் கோவில், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கற்கரை சாலைகள் அலையால் அரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடலில் உருவாகும் ராட்சத அலைகள் தூண்டில் வளைவுகள், தடுப்பு கற்களில் மோதுவதால் கடற்கரைகளில் நிறுத்தி இருக்கும் படகுகள், வலைகள் சேதமடைந்தும் உள்ளது. இதையடுத்து, படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீன்வளத்துறை சார்பில், கடலோரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் பொருட்களை பாதுகாப்புடன் வைத்து கொள்ளும்படியும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருக்கின்றனர். மேலும், எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எண்ணூர் விரைவு சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பயத்துடனேயே அந்த பகுதியை கடந்துசெல்கின்றனர்.