டில்லி

தெற்கு டில்லி மாநகராட்சி அசைவ உணவுகளை காட்சிப்பொருளாக வைக்க உணவு விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது.

தெற்கு டில்லியில் பல புகழ் பெற்ற உணவு விடுதிகள் அமைந்துள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை அசைவ உணவு விடுதிகளாகும்.  இந்த உணவு விடுதிகளில் அசைவ உணவு வகைகளாக காட்சிப் பொருளாக வைப்பது வழக்கம்.  அதைக் காணும் பலரும் அதனால் ஈர்க்கப்பட்டு அந்த உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

இந்நிலையில் தெற்கு டில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  இது குறித்து ராஜ் தத் என்னும் மாநகராட்சி உறுப்பினர் தீர்மானம் ஒன்றை எழுப்பி உள்ளார்.  அவர், “சைவ உணவு சாப்பிடுபவர்கள் பலர் சாலை ஓரத்தில் கோழி, ஆடு, மீன் போன்றவை வெட்டப்படுவதாக புகார் அளித்துள்ளனர்.  அதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் இரத்தத்தை காண்பதால் அவர்கள் வாந்தி வந்து அவதிப்படுகின்றனர்.

அது மட்டுமின்றி அந்த இடங்களில் ஈ மொய்ப்பதால் பல வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது.  அதே போல அசைவ உணவு வகைகளை காட்சிப் பொருள்ளக வைப்பதினால் அவைகள் மூலம் பல நோய் பரவ வாய்ப்புள்ளது.  அதுவும் சைவ உணவு உண்பவர்களின் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாநகராட்சி இது போல சாலை ஓர மாமிசக்கடைகளை தடை செய்துள்ளது.  இந்தத் தடை அசைவ உணவுகளை காட்சிப்பொருளாக வைக்கும் உணவு விடுதிகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.  மேலும் இது குறித்து உணவு விடுதி உரிமையாளர்களின் கருத்தையும் கேட்டுள்ளது.

இது குறித்து உணவு விடுதி உரிமையாளரான வாசுதேவ் என்பவர், “அசைவ உணவுகளை காட்சிப் பொருளாக வைப்பது வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே.   அப்படி இல்லையெனில் எங்கள் வியாபாரம் பாதிக்கப் படலாம்.  இதை அரசு பரிசீலிக்க வேண்டும்.  அதே நேரத்தில் பல திருமண விழாக்களில் இது போல திறந்த வெளியில் அசைவ சமையல் நடைபெறுவது உண்டு.  அதை எவ்வாறு தடை செய்ய முடியும்?  மேலும் சைவ உணவு வகைகளை திறந்த வெளியில் வைத்து விற்கும் போது அதுவும் கெட்டுப் போகாதா?” என வினா எழுப்பினார்.