வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape) பயன்படுத்த வகை செய்துள்ளது.
இந்த புதிய அம்சம் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம். ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன நடந்தாலும் அது வீடியோ கால் ரிசீவருக்கு தெரியும்.
வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவை கடும் போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரை பகிர்வு அம்சத்துடன், இந்த தளத்தில் ஆவணங்கள், ப்ரெசெண்டேஷன் மற்றும் பலவற்றிற்கான அணுகலை திறந்துள்ளது வாட்ஸ்அப். இந்த புதிய அம்சத்தின் மூலம், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொழில்நுட்பம் குறித்த விவரங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர்கள் தங்கள் ஃபோன் அமைப்புகளில் எதையாவது புதுப்பிக்க விரும்பி, ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், வீடியோ அழைப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தின் மூலம் அவற்றைப் பற்றி விளக்க முடியும்.
மீட் அல்லது ஜூம் மூலம் வீடியோ அழைப்பின் போது திரையைப் பகிர்வதில் உங்களுக்கு முழுக் கட்டுப்பாடு இருப்பது போல், வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பின் போது ஸ்கிரீன் ஷேரிங் மீதும் அதே கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள். அதாவது, பயனர் எப்போது வேண்டுமானாலும் திரையில் உள்ளடக்கப் பகிர்வை நிறுத்தலாம்.
வீடியோ அழைப்பின் போது புதிய திரைப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் ‘Share’ ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷனைப் பகிர வேண்டுமா அல்லது முழுத் திரையையும் பகிர வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
டெலிக்ராம் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளுக்கு மாறியதை அடுத்து வாட்ஸப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில் வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சத்தை தொடர்ந்து அதன் பயனர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.