சென்னை:
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதமாகலாம் என்று வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்த நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விலையில்லா பாடநூல்கள் தங்களது தேவை பட்டியலின் படி பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும், 2,3,4,5,7,8,10,12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட நூல்களை 2019 – 20 ம் கல்வியாண்டில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.