சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும்  16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல்  பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, சுமார்  9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஆனால், மீண்டும் கொரோனா வைரசின் 2வது அலையின் தாக்கம் தீவிரமானதால், மீண்டும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதோடு,பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் செயல்படாமல் இருந்து வருகிறது.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில் கொரோனா 2வது அலையில் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோர்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து,   தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்தும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதையடுத்து, வரும் 16ந்தேதி முதல்வர் கல்வித்துறை அமைச்சர் மற்றும், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையின்போது, பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தனியார் பள்ளிக்கு இணையாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது,  விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம், சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அதன்பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.