டெல்லி: வரும் 21 முதல் பள்ளிகள் திறக்க அனுமதித்துள்ள மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன. தற்போதுள்ள ஊரடங்கு, 4ம் கட்ட தளர்வுகளுடன் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், வரும் 21 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். அப்படி வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளி வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.
பள்ளிகளில் 6 அடி தனிமனித இடைவெளி கட்டாயம். அதை மாணவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
பிரார்த்தனை கூட்டம், விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாடு பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி வர அனுமதியில்லை. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் நீங்க, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.