டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 24 கோடியே 70 லட்சம் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உருவாகி உள்ளது.

இந்த சூழலில் பொதுமுடக்கத்தால் இந்தியாவில் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து யுனிசெப் ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியில் பயிலும் 24 கோடியே 70 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் 2 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வியைத் தொடங்கும் முன் அங்கன்வாடி மையத்தில் பயில்பவர்கள். வைரஸ் பாதிப்புக்கு முன்பே, 60 லட்சம் சிறுவர், சிறுமியர் ஏற்கெனவே பள்ளியிருந்து விலகிவிட்டனர்.

இருப்பினும் மாணவர்கள் கல்வி பாதிக்காத வண்ணம், மின்னணு தளங்கள் வாயிலாக அதாவது மொபைல் செயலிகள், தொலைக்காட்சி சேனல்கள், ‘திக்சா தளம்’, ‘ஸ்வயம் பிரபா’ சேனல், இ-பாடசாலை’ போன்றவற்றின் மூலம்  கற்பிக்கப்படுகிறது.

சமீபத்தில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலானது வீட்டிலிருந்தே பயிலும் திட்டத்தை வகுத்துள்ளது. அதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 24 சதவீதம் பேருக்கு மட்டும்தான் வீடுகளில் இணையதளம் மூலம் கல்வி பயிலும் வசதி இருக்கிறது.

அதிலும் நகர்ப்புறங்களில் மட்டும் அதிகம். பாலின அடிப்படையிலும் வேறுபாடு இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு இண்டர்நெட் மூலம் கல்வி பயிலும் வசதி இல்லை. கடந்த மார்ச் 20 முதல் ஏப்ரல் 10 வரை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு 4.60 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இது வழக்கமாக வரும் புகார்களின் எண்ணிக்கையைவிட 50 சதவீதம் அதிகம்.

அதில் 10 ஆயிரம் புகார்கள், அழைப்புகள் குழந்தைகளுக்கு ஆதரவு கேட்டு வந்தன. 30 சதவீதம் அழைப்புகள், புகார்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் ஆகியவை பற்றி வந்துள்ளன.

கொரோனா வைரஸால் மற்றொரு முக்கியமான பாதிப்பு குழந்தைகளை எதிர்நோக்கியுள்ளது. சத்தான சரிவிகித உணவு, எளிதாகக் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 2 கோடி குழந்தைகள் உடல் உறுப்பு வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள், 4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோர், சத்தான உணவு இல்லாமல் தவிக்கின்றனர். 15 முதல் 49 வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நோய் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.