சேலம்:  சேலம் அருகே பனமரத்துப்பட்டி பகுதியில்,  பங்காளி சண்டையில் பள்ளி குழந்தைகளான அக்காள், தம்பி வெட்டி ஆகியே இரு சிறுவர்கள்  படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகஇருவர் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ளது தும்பல்பட்டி.  இந்த பகுதியில்,  வசித்து வரும்  ராஜா – சித்ரா தம்பதியினருக்கு 12ம் வகுப்பு படிக்கும்  நவீனா என்ற மகளும், 8ம் வகுப்பு படிக்கும் சுகன் என்கிற மகனும் உள்ளனர்.  இவர்கள் இருவரும் , அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று இவர்கள்  மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தனர். தொடர்ந்து தங்களுக்கு உரிய பூந்தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்றனர். அப்போதுழ, அங்கு வந்த அவர்களின் உறவினரான  அதே பகுதியைச் சேர்ந்த  தனசேகர்  என்பவர், இருவரையும்  சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.  அரிவாள் வெட்டில் காயமடைந்த  குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தந்தை ராஜா வீட்டில் இருந்து ஓடிவந்துள்ளார். அவரையும், தனசேகர் வெட்டியுள்ளார். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவப்போது,  மூன்று பேரும்  ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே   உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜா உள்பட 3 பேரையம்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதுடன், ராஜாவை மட்டும்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து  பனமரத்துப்பட்டி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த பனைமரத்துப்பட்டி போலீசார், உயிரிழந்த அக்கா, தம்பி ஆகியோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பங்காளி சண்டையில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்துள்ளது. கொலையாளி தனசேகரின் அப்பாவும்,  வெட்டுபட்ட ராஜாவின் அப்பாவும் அண்ணன் தம்பிகள் எனவும், பங்காளி முறையில் உறவினரான ராஜாவிற்கும், தனசேகரனுக்கும்  நிலப்பிரச்சினை உள்பட ஏராளமான கருத்து வேறுபாடு தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே  ஆத்திரமடைந்த தனசேகரன் ராஜா மற்றும் அவரின் இரு  குழந்தைகளை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பள்ளி செல்லும் இரு குழந்தைகளை வெட்டிவிட்டு,   தப்பியோடிய தனசேகரை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் பனமரத்துப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.