புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்க பொதுத்தேர்வு நடைபெறும் என மாநில கவர்னர் தமிழிசை அறிவித்தது சர்ச்சையான நிலையில், தேர்வுகள் நடத்த வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்கள் கோரப்பட்டு உள்ளதாகவும், அதன்பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அங்கு முழு நேரம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அங்கு பள்ளி ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில், 9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். புதுச்சேரியிலும் தமிழக பாடத்திட்டங்களே பின்பற்றுவதால், அங்கு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது சர்ச்சையானது.
இந்த நிலையில், புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கவர்னர் தமிழசை ஆய்வு செய்தார். நீடராஜப்பையர் வீதியில் உள்ள சவரிராயலு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார். அப்போது கவர்னரை சந்தித்த ஊழியர்கள் தங்களது சம்பளம் மிக குறைவாக உள்ளது. கடந்த 4 மாதமாக சம்பளமே வழங்கவில்லை. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பின்னர் செய்தியளார்களிடம் பேசியவர், புதுவையில் பல மாதங்களுக்கு பிறகு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அரை நாட்கள் பள்ளி இருந்தாலும் அவர்களுக்கு தேவையான சத்துணவு வழங்கப்பட வேண்டும். இப்போது காலையில் பால் வழங்குகிறோம். மாணவர்களின் எலும்பு, மூளை வளர்ச்சிக்கு பால் மிகவும் உதவும். காலை உணவு மாற்றி வழங்கும் திட்டமும் உள்ளது என்றார்.
மேலும் மாநிலத்தில் பள்ளிகள் முழுநேரமும் இயங்குவது, தேர்வுகள் நடத்துவது தொடர்பாக இருவிதமான கருத்துகள் உள்ளன. சிலர் முழுநேர பள்ளி வேண்டாம் என்கின்றனர். புதுவையில் தொற்று குறைந்துள்ளது எனவே முழுநேர வகுப்பு தேவை என்று சிலர் கூறுகின்றனர். அதனால் இந்த விஷயத்தில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.