பாங்காக்கின் சதுசாக் மாவட்டத்தில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் மையத்தில் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் பணி குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 1 ஆம் தேதி காலை நடத்தப்பட்ட ஸ்கேனிங்கில் 70க்கும் மேற்பட்டோர் அல்லது உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், ஸ்கேன் செய்யப்பட்ட படத்தில் கான்கிரீட் குவியலுக்கு கீழே எத்தனை மீட்டர் அடியில் உடல்கள் அல்லது ஆட்கள் உள்ளனர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இருந்தபோதும் இதில் சிலர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மியான்மரின் மண்டலே அருகே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 392 கி.மீ தொலைவில் உள்ள தாய்லாந்தின் மே ஹாங் சன் மாகாணத்திலும் உணரப்பட்டது.
இதில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமானது, மதிய நேரம் என்பதால், உணவு இடைவேளைக்குப் பிறகு 17 மற்றும் 21வது மாடிகளுக்கு இடையே ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 72 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக தாய்லாந்தில் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்துள்ள நிலையில் இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணையில், தரமற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்பி தயாரிப்பு நிறுவனத்தை 2024 டிசம்பர் மாதம் தாய்லாந்து அரசு அதிகாரிகள் மூடி சீல் வைத்ததாகவும் கூறப்படுகிறது.