டெல்லி:
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சியை கவிழ்க்கும் வகையில், தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த காங்கிரஸ், ஜேடிஎஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து, அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை செய்து, தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதற்கிடையில், தகுதி நீக்கம் எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பாக எடியூரப்பா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதையும், காங்கிரஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்போவதாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக, முதல்வர் எடியூரப்பா திக் திக் மனநிலையில் இருந்து வருகிறார். எடியூரப்பாவின் ஆடியோ குறித்து, உச்சநீதி மன்றம் காட்டமாக ஏதேனும் கூறினால், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் காணப்படுவதாக கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். பாஜகவின் ஆபரேசன் தாமரை என்ற அறிவிப்பின்படி, மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களுக்கு பணம் மற்றும் பதவி ஆசைக்காட்டி ஆட்சியை கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. எனவே, 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
இடைத் தேர்தல்இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தஉச்சநீதிமன்றம்., நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த நிலையில் காலியாக உள்ள 17ல், 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை தீர்ப்பில், இவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றால் 17 பேரின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான். ஆனால் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அவர்கள் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.