டில்லி

த்மாவதி இந்தித் திரைப்படத்தை வெளிநாடுகளில் டிசம்பர் 1 ஆம் தேதி திரையிட தடை கோரும் மனு நவம்பர் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

பத்மாவதி இந்தித் திரைப்படத்துக்கு எதிராக வழக்கறிஞர் எம் எல் ஷர்மா ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் அளித்திருந்தார்.  அதில், ”இந்தத் திரைப்படம் நமது இந்திய நாட்டைக் கேவலப் படுத்துவது போல அமைந்துள்ளது.  இந்தப் படத்தின் பாடல்களையும் விளம்பரங்களையும் அனுமதித்த தணிக்கை வாரியத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்தப் படத்தில் அரசி பத்மாவதியின் நற்பண்புக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் உள்ள காட்சிகளை தயாரிப்பாளர் நீக்க வேண்டும்.  இந்தப் படம் வெளிநாட்டில் திரையிடப் பட்டால் இந்தியாவின் மேன்மைக்கு களங்கம் உண்டாகும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ராவின் தலைமையில் உள்ள அமர்வு ”பாடல்கள் காட்சிகள் குறித்து தணிக்கை வாரியம் மட்டுமே முடிவு செய்யும்.  இன்னும் அந்தப் படம் தணிக்கை சான்றிதழ் அளிக்கப் படாத நிலையில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.  நீதி மன்றத்தைப் போல தணிக்கை வாரியமும் சட்டத்தின் ஒரு அமைப்பு.  அதை நீதிமன்றத்தால் குறை கூற முடியாது.  வெளிநாடுகளில் திரையிட தடை கோரி தனி மனுவை உடனடியாக அளிக்கவும்.  அதற்கான விசாரணை வரும் நவம்பர் 28ல் நீதிமன்றம் நடத்தும்” எனக் கூறி உள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் திரையிடுவதை பத்மாவதி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.