புதுடெல்லி:

ஆக்கிரமிப்பாளர்களை வனத்தை விட்டு வெளியேற்றும் வன உரிமை சட்டத்தின் கீழ், மலைவாழ் மக்கள் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.


வனக்குழுக்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

வனப் பகுதியில் தொடர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி மலைவாழ் மக்களும் வனப் பகுதியில் வாழ்வோரும் அரசுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஆக்கிரமிப்பாளர்களை வனத்தை விட்டு  வெளியேற்ற வகை செய்யும் வன உரிமைச் சட்டத்தின் கீழ், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வனத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராகவும், அவர்களை வெளியேற்றவும் வகை செய்யும் வன உரிமை சட்டத்தை, பல தலைமுறைகளாக வாழும் மலைவாழ் மக்கள் விசயத்தில் பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மலைவாழ் மக்களை வனப் பகுதியிலிருந்து வெளியேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், வனப்பதியிலிருந்து மலைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்ட விவரத்தை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஒருவர்கூட ஆஜராகவில்லை.

மலைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டது குறித்து 4 மாநில அரசுகள் மட்டும் அறிக்கை சமர்ப்பித்திருந்தன.

மலைவாழ் மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின், என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்டு தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறும்போது, வன உரிமைச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் போது பாஜக அரசு அமைதியாக இருக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜராகவில்லை.

வனத்தில் வாழும் லட்சக் கணக்கான மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் பாஜக அரசு இருப்பதையே இது காட்டுகிறது என்றார்.