டில்லி
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்பு உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் கூறி இருந்தது. அதையொட்டி அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப் பட்டது. அப்போது உடல் ஊனமுற்றவர்களால் எழுந்து நின்று மரியாதை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
நாடெங்கும் பல திரையரங்குகளில் உடல் ஊனமுற்றோர், மற்றும் இயலாதோர் ஆகியோரும் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்க வற்புறுத்தப் பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பல சமூக ஆர்வலர்கள் தேசிய கீதத்துக்கு என்றும் மரியாதை உண்டு எனவும் அதை வற்புறித்தி வாங்குவது தவறானது எனவும் தெரிவித்தது.
தற்போது திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என தீர்ப்பு வழங்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று, “திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை. அது அந்த திரையரங்கு உரிமையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் அவ்வாறு இசைக்கப்பட்டால் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளது.