டெல்லி

உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட மறுத்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் இடைக்கால பிணையில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக பிணையில் வெளிவந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இன்று இந்த வழக்கின் முக்கிய கோரிக்கை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா,

”அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரசாரங்களில்  தனக்கு பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை என்றால், தான் மீண்டும் ஜூன் 4 ஆம் தேதி சிறைக்கு செல்ல நேரிடும் என்று பேசி வருகிறார். இதனை அனுமதிக்க கூடாது”

என்று வாதிட்டார்.

நீதிபதி,

“தீர்ப்பை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.  நீதிமன்றம் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. நீதிமன்றம் யாருக்கும் சலுகை காண்பிக்கவோ, விதிவிலக்கு அளிக்கவோ இல்லை. சட்டப்படியான உத்தரவுகள் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம்”

என்று தெரிவித்துள்ளார்.