டில்லி
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது.
மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை தற்போது நாடெங்கும் நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், “லட்சக்கணக்கான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் 4000 மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகி உள்ளனர். கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் நீட் தேர்வு வைத்தால் ஊரடங்கு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்கள் இந்தியா வந்து தேர்வு எழுத முடியாது.
கொரோனா பரவுதல் எப்போது முடியும் எனச் சொல்ல முடியாத நிலையில் உள்ளது எனவே மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். அல்லது கொரோனா பரவுதல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்து வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு இந்த நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாதா என நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது எனபதர்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.