பெரும் பணமுதலைகளின் வாராக்கடன் மனதை உறைய வைக்கிறது உச்சநீதிமன்றம் வேதனை
இந்தியாவில் பெரும் பணமுதலைகளும், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களும் பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்பிச்செலுத்தாமல் மோசடி செய்யும் அவர்களை திவாலானவர்கள் என அறிவிப்பது மனதை உறைய வைப்பதாக உச்சநீதிமன்றம் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.
அதாவது ரூ.500 கோடி மற்றும் அதற்கும் மேலான கடன் தொகையைச் செலுத்தாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் வாராக்கடன் விவரத்தை மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏழை விவசாயிகள் வங்கிகளில் சில ஆயிரம் ரூபாய்கள் கடன் வாங்குவது என்பதே மிகப்பெரும் பணியாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பெரும் பண முதலைகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் பல ஆயிரம் கோடிரூபாயை கடனாகப் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து விட்டு, அந்நிறுவனங்கள் கடனில் தத்தளிப்பதாகவும், சிரமத்தில் மூழ்குவதாகவும் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திவால் என்று அறிவிக்கின்றனர். இந்த நடைமுறைகளை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம் ஏதாவது செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தெர்வித்தனர். மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
மேலும் வங்கிகளுக்கும், அவர்களது பணக்கார வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான ரகசியக்காப்பு எத்தகையது என்றும், இது எந்த அளவுக்கு அவர்கள் பெயர்களையோ, அவர்கள் திருப்பிச் செலுத்தாத தொகையையோ வெளியிடவிடாமல் செய்கிறது என்றும் இது எப்படி நீதித்துறை உத்தரவையும் தடுக்கிறது என்பதையும் பெரிய அளவில் விரிவான விசாரணை நடத்துவோம் என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.
பெரிய அளவிலான வாராக்கடன் பற்றிய விவரத்தை வெளியிடுவது ரகசிய காப்புத்தன்மைக்கு எதிரானது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.இந்த வழக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் ஊழல் தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அப்போதுதான் பெரும்புள்ளிகளின் வாராக்கடன் பற்றிய விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
வங்கிகளின் வாராக்கடன் பற்றிய விவரத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெற்ற தகவ்லகளின் அடிப்படையில் சமீபத்தில் நாளிதழ் ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டிருந்தது.அதில் 29 அரசுடமை வங்கிகளில் 2004 முதல் 2015 வரை வாரக்கடன் தொகை ரூ. 2.11 லட்சம் கோடி என்றும் , 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளுக்கிடையேயான வாராக் கடன் ரூ 1.14 லட்சம் கோடி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.