உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு(பிசிசிஐ)கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பிசிசிஐயின் நிதி விவகாரங்கள் அனைத்தும் இனி லோதா கமிட்டியின் பரிந்துரைப்படியெ செயல்படுத்தப்படும். லோதா கமிட்டி விதித்துள்ள வரம்புக்கு மீறி எந்த ஒப்பந்தத்திலும் இனி பிசிசிஐ கையெழுத்திட இயலாது. அப்படி கையெழுத்திட வேண்டுமென்றால் அதற்கு இனி லோதா கமிட்டியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
உச்சநீதி மன்றம் பிசிசிஐக்கு இவ்வளவு கிடிக்கிப் பிடி போடக் காரணம் இதற்கு முன்பு லோதா கமிட்டியின் பரிந்துரைகளை பிசிசிஐ துச்சமாக மதித்து அலட்சியம் செய்ததுதான். தலைமை நீதியரசர் டிஎஸ்.தாகூர் தலைமையிலான பெஞ்ச் பிசிசிஐ இனி லோதா கமிட்டியின் ஆலோசனைக்கேற்றபடிதான் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அனுப்ப வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
மேலும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் மற்றும் செயலர் அஜய் ஷ்ர்க் இருவரும் லோதா கமிட்டி முன் ஆஜராகி கமிட்டியின் பரிந்துரைகளில் எவை எவற்றை இதுவரை தாங்கள் ஏற்று அமல் படுத்தியிருக்கிறார்கள், இன்னும் அமல்படுத்தாத பரிந்துரைகள் எவை? அதற்கான காரணம் என்ன? போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி ஒரு ஆடிட்டரை நியமித்து கிரிக்கெட் வாரியத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி லோதா கமிட்டியை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த உச்சநீதி மன்ற உத்தரவு இனி வரும் ஐபிஎல் உள்ளிட்ட பல போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிரார்க்கப்படுகிறது.