டில்லி

கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப் பணி இழப்பு ஏற்பட்டது.  அனைத்து அலுவலகங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கப்பட்டதால் மக்களில் பலர் ஊதியம் கிடைக்காத நிலை உண்டானது.   ஆயினும் பள்ளிகள் இயங்காத நிலையிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களைச் செலுத்தப் பள்ளிகளின் நிர்வாகிகள் மிகவும் வலியுறுத்தினர்.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஒரு சில மாநில அரசுகள் முழு கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவு இட்டன.  உதாரணமாக ராஜஸ்தான் அரசு சி பி எஸ் இ பள்ளிகளில் 70% கட்டணம் மற்றும் மாநில போர்ட் பள்ளிகளில் 60% கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.   இதையொட்டி மேலும் சில மாநில அரசுகளும் உத்தரவிட்டதால் இதற்கான விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்திடம் வழக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  அந்த உத்தரவில், “இந்த 2020-21 கல்வியாண்டில் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி நிலையத்துக்கு முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  இந்த கொரோனா கால கல்விக் கட்டணம் சென்ற 2019-20 ஆம் ஆண்டை விட அதிகமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டும்.

கல்விக் கட்டண நிலுவைத் தொகைகளைப் பெற்றோர்கள் 2021 ஆம் வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஆறு தவணைகளாகக் கட்டலாம்.   கட்டணம் கட்டவில்லை என்பதற்காகக் கல்வி நிலையங்கள் மாணவர்களைப் பள்ளியை விட்டு நீக்கக் கூடாது.  அத்துடன் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டணம் செலுத்தாததைக் காரணம் காட்டி தேர்வுகள் எழுதுவதைத் தடுக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.