டில்லி
மோடியை எதிர்த்து வேட்பு மனு அளித்த முன்னாள் ராணுவ வீரரின் மனு தள்ளுபடி செய்தது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2017 ஆம் வருடம் எல்லை பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் தனது முகாமில் அளிக்கப்பட்ட உணவு சரி இல்லை என வீடியோ ஒன்றை பதிந்தார். அதை ஒட்டி கடும் சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு நடந்த விசாரணையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டி இடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தேஜ் பகதூர் யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
அதை எதிர்த்து தேஜ் பகதூர் யாதவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை நிராகரித்தது குறித்து நாளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.