டெல்லி
உச்சநீதிமன்றம் இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் ஓரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
உச்சநீதிமன்றம் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறி, அது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்ற மாநில அரசின் உறுதியையும் கபில்சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
“மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதே நேரம் மருத்துவர்கள், சமூகத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது., நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணை 17-ந்தேதிக்கு தள்ளி வைக்க்கப்படுகிறது, அதற்குள் புதிய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.’
என்று தெரிவித்துள்ளனர்