டில்லி:
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பபட்ட வழக்கில், மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம்தேதி நீக்கி நடவடிக்கை எடுத்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அங்கு சுமார் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதையும், ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உ ள்ளது. மேலும், காஷ்மீரில் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நீக்க வேண்டும் என்று காஷ்மீர் டைம்ஸ் இதழின் ஆசிரியரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுவில், , காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் மட்டுமே அங்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வழக்கறிஞர் எம். எல். சர்மா, ஷேலா ரஷித், ஷா பசல் ஆகியோர் காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை நீக்கியது தவறு என்று வழக்கு தொடுத்துள்ளனர். சிறப்பு அதிகாரத்தை நீக்க கடைப்பிடிக்கப்பட்ட முறை தவறானது. அதை ஏற்க கூடாது. இந்த சிறப்பு அதிகார நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.
அப்போது, இதுகுறித்து மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிரான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அமர்வு அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பபட்டது..
வழக்கில் ஆஜரான மத்தியஅரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளதால், மாநில சட்டமன்றம் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், எனவே காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான விசாரணையின் போது, அரசாங்கத்தின் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுபோன்ற விவகாரத்தில், உச்சநீதி மன்றத்தின் அறிவிப்பு “எல்லை தாண்டிய விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் தவறாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மேத்தா வாதிட்டார்.
அரசாங்கத்தை குறிவைக்க நீதிமன்ற அறிவிப்பைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பிரச்சினை ஏற்படுத்துவார்கள் என்றும், “இந்த பிரச்சினையில் என்ன நடந்தாலும் அது மற்ற அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.
ஆனால், தலைமைநீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்த நிலையில், “நாங்கள் ஒரு உத்தரவை நிறைவேற்றியுள்ளோம் … நாங்கள் அதை மாற்ற மாட்டோம்” என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான பாராளுமன்றத்தின் முடிவை மத்திய அரசு உச்சநீதிமன்றம் முன் தாக்கல் செய்தது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையைத் தொடர்ந்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களான ஜே & கே மற்றும் லடாக் எனப் பிரித்தது. இரண்டு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31 அன்று பிறக்கும் என்றும் அறிவித்திருந்தது.