டில்லி

குழந்தைகள் பாலியல் மற்றும் பலாத்கார வீடியோக்கள் வெளி வருவதால் யாகூ, முகநூல், கூகுள்,  வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களுக்கு உச்சநீதிமன்றம் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சமூக வலை தளங்களில் ஆட்சேபணைக்குரிய பல வீடியோ பதிவுகள் பதியப்படுகின்றன.   இதை அரசு பலவகைகளிலும் தடை செய்த பிறகும் குழந்தைகள் பாலியல், பலாத்காரம் போன்ற வீடியோக்கள் பெருமளவில் பகிரப்படுகின்றன.   இதை ஒட்டி பிரோஜ்வாலா என்னும் தன்னார்வ நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தொடர்ந்தது.  இதை சுவோ மோட்டோ முறையில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு தானே எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி லாகுர், உதய் உமேஷ் லலித் ஆகியோரின் அமர்வு விசாரித்தது.   இந்த அமர்வு,  யாகூ, அயர்லாந்து முகநூல்,  இந்திய முகநூல், இந்திய கூகுள்,  சர்வதேச கூகுள், மைக்ரோசாஃப்ட், மற்றும் வாட்ஸ்அப்  ஆகிய தளங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியது.    ஆனால் இந்த நிறுவனங்கள் இதற்கு பதில் அளிக்கவில்லை.

இதை ஒட்டி உச்சநீதிமன்றம் ”இந்த இணைய தளங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இது வரை பதில் அளிக்காதமைக்காக இந்த அபராதமும்  வரும் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.   இந்த அபராதம் உடனடியாக நீதிமன்றத்தின் பெயரில் வைப்பு நிதியாக அளிக்கப்பட வேண்டும்.  பதில் கிடைத்த உடன் இந்த தொகை திருப்பி தரப்படும்” என உத்தரவிட்டுள்ளது.