டெல்லி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில்ல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தபோராட்டத்தில் 100-வது நாள் ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.  ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் (29.02.2024) தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வேதாந்தா குழுமத்தின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.