டெல்லி
இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது.
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் சட்டத்தை மீறி செயல்படமாட்டோம் என உறுதி அளித்த பிறகும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வெளியாகியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்தது.
உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவத்தின் உத்தரவாதத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது. ஏற்கனவே பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.