டெல்லி
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் உச்சநீதிமன்றம் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லி நகரை சுற்றியுள்ள மாநிலங்களில்விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். எனவே இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. டெல்லியில் காற்று மாசு 400ஐ தாண்டியிருக்கிறது.
முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. அதிகரிக்கும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த டெல்லி அரசு அறிவுறுத்தி இருந்தது. ஏற்கனவே 5-ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்தலாம் என்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு மிகவும் கவலை அளிப்பதாகவும், பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.