டெல்லி

மிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லை குற்றம் சாட்டப்பட்டவரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நகை நட்டுகளை விற்றுப் பணம் கொடுத்திருப்பதால், பிரதான குற்றவாளியான செந்தில்பாலாஜி மீதான வழக்கை தனியாக விசாரிக்கக் கோரியும் மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி குற்றவாளியா அல்லது குற்றம்சாட்டப்பட்டவரா என்பதை முதலில் அறிய விரும்புகிறோம்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரமிக்க அரசியல்வாதியாகவும், மக்கள் செல்வாக்கு பெற்றவராகவும் இருக்கிறார். அமைச்சர் பதவியை வகித்த ஒருவர், அரசு வழக்கறிஞர் மூலம் வழக்கை எதிர்கொள்வது சரியல்ல என்பது எதிர் தரப்பினரின் கவலையாக உள்ளது.

எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,500 பேரின் முழு விவரங்கள், பணம் கைமாறிய விதம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.