டில்லி

னைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பெற்ற நிதி பத்திரங்கள் மற்றும் அளித்தவரகள் குறித்த விவரங்களை  தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் தேர்தல் நிதிகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.    இந்த தேர்தல் பத்திரங்களை குடிமக்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட யாரும் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக அளிக்க முடியும்.

அரசியல் கட்சிகள் தங்களிடம் உள்ள இந்த பத்திரங்களை வங்கிகளில் செலுத்தி பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த தேர்தல் பத்திர முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.    இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் கீழுள்ள அமர்வின் கீழ் விசாரணையில் உள்ளது.

இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் வேணு கோபால்  அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக தேர்தல் நிதி அளிப்பதை விட தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக அளிப்பது சிறப்பானது என தெரிவித்தார்.  தேர்தல் ஆணையம் சார்பில் நன்கொடை அளிப்பவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த வாதங்களுக்கு பிறகு அமர்வு, “அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொகை விவரங்கள் மற்றும் அதை அளித்தவர்கள் குறித்த விவரஙக்ள் ஆகியவற்றை வரும் மே 30 குள் அளிக்க வேண்டும் இந்த விவரங்கள் சீலிட்ட உறையில் வைத்து அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இதுவரை அரசியல் கட்சிகள் தங்களுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதி விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்து வந்தன.   இந்நிலையில் இந்த நன்கொடைகளை அளித்தவர்கள் விவரமும் தெரிவிக்க வேண்டும் என உசநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.