மும்பை

மும்பையிலுள்ள ஒரு பெண்ணின் கருவை பரிசோதித்ததில் அந்த குழந்தை பிறந்தால் ஆயுள் முழுவதும் மூளைக் கோளாறுடன் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டதால் கருகலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

மும்பையில் வசிக்கும் 21 வயதான ஒரு பெண்ணின் கருவை பரிசோதித்ததில் அந்தக் குழந்தை பிறந்தால் அது மூளை வளர்ச்சியின்றி இருக்கும் எனவும், அதைக் குணப்படுத்த முடியாது எனவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் சமையல் வேலை செய்கிறார். இந்தப் பெண் வேலை பார்க்கவில்லை.  ஆயுளுக்கும் குறை உள்ள குழந்தையை காண அந்தப் பெண்ணுக்கு மனம் வரவில்லை.

எனவே மருத்துவரிடம் கருவைக் கலைக்கச் சொல்லிக் கேட்டாள்.  இந்தியச் சட்டப்படி 20 வாரம் வளர்ந்த கருவைக் கலைக்கக் கூடாது.  எனவே மருத்துவர் இதை நீதிமன்ற உத்தரவு கேட்டு மனு செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் மருத்துவ பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்து அந்தப் பென்ணின் 24 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்தது.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் நிகில் தாதர், ”அந்தக் குழந்தை பிறந்தாலும் அதை சிகிச்சை செய்ய முடியாது,  மூளை சிறிதும் வேலை செய்யாமல் போட்டது போட்ட படியே இருக்கும்.  பசி, வலி எதையும் அறிய முடியாது.  அதை காணும் துயரத்தை விட கருக்கலைப்பு அந்த தாயின் மன உளைச்சலைத் தடுக்கும்” என கூறியுள்ளார்