டில்லி:

காஷ்மீர் மக்களை சந்திக்க குலாம்நபி ஆசாத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதி அளித்து உள்ளது.

சிறப்பு அந்தஸ்து செய்யப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இணையதள சேவை தடுக்கப்பட்டும், அங்கு வாழும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் காஷ்மீர் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் 6 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் காஷ்மீர் சென்று மக்களை சந்திக்க அனுமதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுமீதான விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குலாம்நபி ஆசாத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, அவர்,   ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா மற்றும் ஜம்மு ஆகிய இடங்களுக்குச் சென்று சுற்றுலா மற்றும் பழ உற்பத்தியை நம்பியுள்ள தினசரி கூலிகளின் அவலநிலை குறித்து அறிந்து வரலாம் என்றும், எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது மற்றும், மாநிலத்தில் பேரணிகளை நடத்த மாட்டேன் என்று பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதி மன்றத்தின் அனுமதிக்கு நன்றி தெரிவித்துள்ள குலாம்நபி ஆசாத், தான் காஷ்மீர் சென்று வந்ததும், தலைமைநீதிபதி முன்பு அறிக்கை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் அனுமதியுடன் கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறிய ஓவைசி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் காஷ்மீர் செல்ல ஏன் உச்சநீதி மன்றத்தில் அனுமதி கோர வேண்டியதுள்ளது. இதன் காரணமாக அங்கு இயல்புநிலை இல்லை என்பது தெளிவாகிறது. அங்கு எல்லாம் இயல்பாக உள்ளது என்றால் ஏன் அரசியல்வாதிகள் செல்லக்கூடாது? என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.