டில்லி
அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை குறித்த கால அவகாச வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளது என்றும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டது.
மார்ச் 2 ஆம் தேதி அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை முடிவுகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. கடந்த மார்ச் 2 தேதி உச்சநீதிமன்றம், செபி நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, செபி 3 முக்கியமான விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது,
இத்துடன் செபி தனது விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் விரைவாக முடித்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. தற்போது இந்த 2 மாத காலம் முடிவடைந்த நிலையில் செபி விசாரணைக்கான கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிக்க மனு கொடுத்தது
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் செபிக்கு கூடுதலாக மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. செபி குறைந்தது ஆறு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், கால நீட்டிப்பு கோரிய மனுவை மே 15 திங்கட்கிழமை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.