மும்பை

பாரத ஸ்டேட் வங்கி தனது ஊழியர்கள் மீட்டிங்கின் போது ஏப்பம் விடக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியுன் ஒன்றாகும்.   கடந்த சனிக்கிழமை அன்று இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் நடந்துக் கொள்ள வேண்டிய முறை,  உடை போன்றவைகள் குறித்து சில விதிமுறைகள் குறித்து உரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.   அதில் காணப்படும் பல விதிகள் ஊழியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

அந்த சுற்றறிக்கையில், “பணி புரியும் இடத்தின் மேன்மைக்காக வங்கி சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.   ஆண் பணியாளர்கள் தங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள சீருடைகளை அணிந்து பணிக்கு வர வேண்டும்.   சீருடை வழங்கப்படாதவர்கள்  ஃபார்மல் உடையில் மட்டுமே வர வேண்டும்.   பெண் தொழிலாளர்கள் ஃபார்மல் இந்திய அல்லது மேற்கத்திய உடைகளை அணிந்து பணிக்கு வர வேண்டும்.

ஆண், பெண் இரு பாலருமே டி சர்ட்டுகள்,  அரைக்கால் அல்லது முக்கல் கால் டிரவுசர்கள் அணிந்து பணிக்கு வரக்கூடாது.   ஜீன்ஸ்,  விளையாட்டுக் காலனிகளும் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.   அதே போல பெல்ட்டுகளும் டையும் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது”  என குறிப்பிடப்பட்டுள்ளது.   இது போல மூன்று பக்கங்கள் நிறைய விதிமுறைகள் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதில் முக்கியமான ஒன்று, “ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளுடனோ அல்லது வாடிக்கையாளர்களுடனோ மீட்டிங்கில் உள்ள போது ஏப்பம் விடக் கூடாது.   அதனால் மற்றவர்கள் எரிச்சலைடைவார்கள்.   அதை மனதில் கொண்டு நடக்க வேண்டும்.  மேலும்  இது போன்ற செய்கை உங்களை பணியில் ஆர்வமிலாதவர் என மற்றவர்களை நினைக்கத் தூண்டும்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.