டில்லி

பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் வரும் 31 ஆம் தேதிக்கு மேல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு பல துணை வங்கிகள் செயல்பட்டு வந்தன.  திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி,  ஐதராபாத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் பாரத பெண்கள் வங்கியும் கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.   அதன் பிறகு அனைத்து இணைக்கப்பட்ட வங்கிகளின் பெயரும் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.   அதைத் தொடர்ந்தி அந்த வங்கிகளில் ஐ எஃப் எஸ் சி குறியீட்டு எண்களும் மாற்றப்பட்டன.

பெயர் மாற்றம் மற்றும் ஐ எஃப் எஸ் சி குறியீட்டு எண் மாற்றம் காரணமாக புதிய காசோலை புத்தகங்களை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும் படி வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக் கொண்டது.   பெரும்பாலான வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க  அது இந்த வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது இந்த மாதம் 31 ஆம் தேதிக்குப் பின் பழைய காசோலைகள் செல்லாது என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.   இதுவரை புதிய காசோலை புத்தகங்கள் வாங்காதவர்கள்  அதை இணைய தளம்,  ஏடிஎம் கள் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என வங்கி அறிவித்துள்ளது.