டில்லி
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சீர் செய்ய நிர்வாக இயக்குனர் நரேஷ் கோயல், அவர் மனைவி மற்றும் இருவர் பதவி விலக வேண்டும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் அளிக்கவும் முடியாத நிலையில் உள்ளது. நிறுவனத்துக்கு ரூ.8200 கோடி கடன் உள்ளது. நிர்வாக செலவுகளுக்கு நிதி இல்லாததால் 119 விமான சேவைகளில் தற்போது 41 விமான சேவைகள் மட்டுமே நடந்து வருகிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலாகாமல் தடுக்க வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் உதவ வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிறுவனத்துக்கு பெருமளவில் கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி நிறுவனத்தை சீர் செய்வது குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் பங்குதாரரான எதிஹாட் ஏர்வேஸ் தனது 25% பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு விற்க தயாராக உள்ளதாக அறிவித்தது. மற்றொரு இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து 40 விமானங்களை வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது குறித்து புதிய விமானிகளுக்கான நேர்காணலை நடத்தியது. இதில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சுமார் 300 பேர் கலந்துக் கொண்டனர்.
ஸ்டேட் வங்கி தலைவர் ரஜினீஷ் குமார், “ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து நரேஷ் கோயல், அவர் மனைவி அனிதா மற்றும் இரு நியமன இயக்குனர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும். அதன் பிறகு கடன் கொடுத்த நாங்கள் இணைந்து ஜெட் ஏர்வேஸை சீரமைக்க உள்ளொம். இதற்கான திட்டம் தயாராக உள்ளது. “ என தெரிவித்துள்ளார்.