மீபத்தில் உலகம் முழுதும்  தலைப்புச் செய்தியாக ஆன விசயம்… “சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி” என்பதாகும்.

ஆமாம்.. அங்கே பெண்கள் கார் ஓட்ட இதுவரை அனுமதி கிடையாது. தற்போதைய சவுதி அரசின் நடவடிக்கையை அமெரிக்கா, “நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கை” என தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டாசும் இதை வரவேற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கான சவுதி அரேபியா தூதர் இளவரசர் காவித் பின் சல்மான் வரவேற்றுள்ளார். இது வரலாற்றில் மிகப் பெரிய நாள். நல்ல நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு என வர்ணித்துள்ளார். பெண்கள் டிரைவிங் செய்யவும் லைசென்சு பெறவும் தனது கணவரையோ, ஆண் பாதுகாவலரையோ நாட வேண்டியதில்லை. இனி அவர்கள் விருப்பப்பட்ட இடத்துக்கு கார் ஓட்டிச் செல்லலாம் என்றார்.

ஆனால் பலரும் கவனிக்காத விசயம்..

பெண்கள் கார் ஓட்ட பலகட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

கார் ஓட்டுபவர்கள் காரின் உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் சரியான ஓட்டுநர் பழகு நிலையத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் கண்டிப்பாக அதற்கான சீருடை அணிந்திருக்க வேண்டும். – இதெல்லாம் சரிதான். இருபாலருக்கும் பொதுவானதுதான்.

ஆனால் பெண்களுக்கு என பிரத்யேகமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஆண்கள் கார் ஓட்ட 18 வயது நிறைந்திருந்தால் போதும். ஆனால் பெண்கள் 30 வயதைக் கடந்திருக்க வேண்டும்.

ஆண்கள், நாடு முழுதும் எங்கு வேண்டுமானாலும் கார் ஓட்டிச் செல்லலாம். ஆனால் பெண்கள், நகரப்பகுதிகளில்தான் கார் ஓட்ட வேண்டும்.

அதே போல ஆண்களைப் பொறுத்தவரை இரவு பகல் எந்த நேரத்திலும் கார் ஓட்டலாம். ஆனால் பெண்களுக்கு நேரக் கட்டுப்பாடு உண்டு.

“அட.. பெண்கள் கார் ஓட்ட இத்தனைக் கட்டுப்பாடுகளா..” என்கிறீர்களா..

இதையே அந்நாட்டு பெண்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கறார்கள்.

“இதுவரை விளையாட்டு போட்டிகளைப் பார்க்கக்கூட பெண்களுக்குத் தடை இருந்தது.  சமீபத்தில்தான் தலைநகர் ரியாத்தில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது அளிக்கப்பட்டுள்ளது. இதுவே முன்னேற்றம்தான். போகப்போக இதர உரிமைகளும் அளிக்கப்படலாம்” என்று திருப்தியுடன் தெரிவிக்கிறார்கள் அந்நாட்டுப் பெண்கள்… தங்கள் பெயரை வெளியே சொல்லாமல்.

எப்படியோ, சவுதி அரசின் நடவடிக்கை நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்!