ரியாத்

காஷ்மீர் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இந்திய அரசு விதி எண் 370ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   இணையம், தொலைப்பேசி சேவைகள் முடக்கப்பட்டன.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.    இந்தியா அந்தப் பகுதியில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் நடத்துவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளிட்ட பல அமைப்புக்களிடம் புகார்கள் அளித்தன.   ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதால்  யாரும் இதில் தலையிடவில்லை.

இந்நிலையில் நாளை இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கூடுகிறது.   அத்துடன் காஷ்மீர் விவகாரம் குறித்து விசாரிக்க மற்றொரு தனிக் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்   இந்த கோரிக்கைக்குச் சவுதி அரேபியா மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு ஏற்கனவே  இது குறித்த தனது கருத்துக்களை நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. எனவே காஷ்மீர் விவகாரம் குறித்து மட்டும்  விவாதிக்கத் தனிக் கூட்டம் தேவை இல்லை   இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத் துறை கூட்டத்துக்கு  பாக் அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் வரும் போது பாகிஸ்தான் அரசு தேவை இல்லாமல் இந்த கோரிக்கையை எழுப்பி உள்ளது.

இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசு நடுநிலை வகிக்க விரும்புகிறது.   மேலும் விதி எண் 370 ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை எனவே சவுதி கருதுகிறது.  அதனால்  இந்த விவகாரத்தில் தலையிட சவுதி அரேபியா விரும்பவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.