ரியாத்: செளதி அரேபியாவில் மரணமடைந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக கோரப்பட்ட 31 மில்லியன் ரியால்கள் மதிப்பிலான தொகை செட்டில் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் உள்ளடங்கிய ரியாத் தொழிலாளர் உறவுகள் துறையானது, இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மரணமடைந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் நாடுகளுடைய தூதரகங்கள் மற்றும் அந்த தொழிலாளர்களுடைய வாரிசுகளுடன் ஒருங்கிணைந்து, கடந்த 15 மாதங்களாக இந்த நிதியை திரட்டியது ரியாத் தொழிலாளர் உறவுகள் துறை.

இந்தத் துறை மேற்கொண்டிருக்கும் ஒரு மிக முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மேலும், செளதியின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சிகளின் அடிப்படையில், புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதிலும், இத்துறை தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தப் புதிய சீர்திருத்தத்தின்படி, சச்சரவுகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதற்கு நடத்தப்படும் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ள தவறும் நிறுவனங்களின் அனுமதியின்றியே, தங்களின் பணியை வேறிடத்திற்கு மாற்றிக்கொள்ளும் உரிமை தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.