டெல்லி: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தலா ரூ. 2லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், 19 பேர் பலியானார்கள். 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந் தநிலையில், வெடிவுபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் பலியாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பலியானோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.