ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி வனத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மே 5 முதல் 8 வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாதம் சிலம் நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்ட நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் 8ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.